புதுடில்லி: ”குஜராத் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் மில்லர் செய்ததில் எவ்வித தவறும் இல்லை,” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டில்லி, குஜராத் அணிகள் மோதிய கிரிக்கெட் லீக் போட்டி டில்லியில் நடந்தது. டில்லி அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டன. கைவிரலில் காயமடைந்த மில்லர், குல்தீப் களத்தில் இருந்தனர். 5வது பந்தை எதிர்கொண்ட மில்லர், ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும், எடுக்காமல் விட்டுவிட்டார். 6வது பந்தை, குஜராத்தின் பிரசித் கிருஷ்ணா ‘பவுன்சராக’ வீசினார்.
பந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல, ஒரு ரன் எடுக்க முயற்சித்த போது, குல்தீப் ரன் அவுட்டானார். இதனால் டில்லி அணி 1 ரன்னில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. லீக் அரங்கில் இதுபோல, டில்லி அணி ஒரு ரன்னில் தோற்றது நான்காவது முறையாக நடந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
மில்லர் சிறப்பாக பேட்டிங் செய்ததால், போட்டியை நாம் எப்படியும் வெற்றிகரமாக ‘பினிஷிங்’ செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்த நோக்கத்தை குறை கூற முடியாது. ஆனால், நெருக்கடியான சூழலில், பிரசித் கிருஷ்ணா, சரியான உயரத்தில், வேகம் குறைவாக, ஒரு ‘பவுன்சரை’ வீச, மில்லர் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
அதேநேரம் நெருக்கடியான நேரத்தில் போட்டியின் சூழ்நிலை குறித்து விழிப்புணர்வு மிக முக்கியம். 1986ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 348 ரன் என்ற இலக்கை ‘சேஸ்’ செய்தது இந்தியா. கடைசி பேட்டர் மணிந்தர் சிங் அவுட்டாகும் முன், மறுபக்கம் சிறப்பாக பேட்டிங் செய்த ரவி சாஸ்திரி, ஒரு ரன் எடுக்க போட்டி ‘டை’ ஆன (ஸ்கோர் 347), சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
குல்தீப் ஏற்கனவே ஒரு ரன் எடுத்திருந்தார். இந்நிலையில் 5வது பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்திருந்தால், அது சிறந்த முடிவாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அக்சர் ஆதரவு
கடைசி நேரத்தில் செய்த தவறு காரணமாக, டில்லி அணி தோற்றதால், மில்லர் சோகத்துடன் காணப்பட்டார். கண்ணீர் விட்டு அழுதார். இவரை தேற்றிய கேப்டன் அக்சர் படேல், சக வீரர்களிடம் கூறுகையில்,” ஒருவேளை, கடைசி ஓவரில் மில்லர், சிக்சர் (4வது பந்து) அடித்திருக்கா விட்டால், முன்னதாக தோல்வி அடைந்திருக்கலாம். வருத்தம், சோகம் இருந்தாலும், சென்னைக்கு சென்று, மீண்டும் புதியதாக துவங்குவோம்,” என்றார்.
