ஹால்டியா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி ஆறு உத்தரவாதங்களை

ஹால்டியா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி ஆறு உத்தரவாதங்களை அளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வரும் 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி ஹால்டியாவில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், அம்மாநில மக்களுக்கு ஆறு உத்தரவாதங்களை பிரதமர் மோடி அளித்தார்.

அதன் விபரம்:

1 மேற்கு வங்கத்தில் பா.ஜ., அரசு அமைந்தால் இந்த மோசமான அவல நிலை அகற்றப்படும். சட்டத்தின்படி ஆட்சியை நிலைநாட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.

2 மக்களுக்கு சேவையாற்றும் வகையில் அரசு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்படும். பா.ஜ., அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருப்பர்.

3 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப்படும்.

4. திரிணமுல் காங்., ஆட்சியில் அமைச்சர் முதல் கடை நிலை ஊழியர் வரை யார் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்போம். திரிணமுல் குண்டர்கள் ஒவ்வொருவரும் நீதிக்கு பதில் கூறியே ஆக வேண்டும். மக்களின் பணத்தை சுரண்டியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம். திரிணமுல் காங்., ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களும் விசாரிக்கப்படும்.

5. மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவர். அரசியல் சாசனத்தின்படி அகதிகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

6. மாநில அரசு ஊழியர்களின் நலனை காக்கும் வகையில், 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை மேற்கு வங்கத்தில் உடனடியாக அமல்படுத்துவோம்.

கூடுதலாக ஒரு உத்தரவாதத்தையும் தருகிறேன். மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம். நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link