'சூப்பர் ஸ்டார்' வைபவ் சூர்யவன்ஷி * கிரீம் ஸ்மித் பாராட்டு

புதுடில்லி: இந்திய கிரிக்கெட்டின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. சமீபத்தில் யூத் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனலில், 80 பந்தில் 175 ரன் விளாசி, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். கிரிக்கெட் லீக் தொடரின் முதல் 3 போட்டியில் 49 பந்தில் 122 ரன் விளாசியுள்ளார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய முதல் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார்.

இவர் குறித்து தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன், 2008ல் கிரிக்கெட் லீக் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த, கிரீம் ஸ்மித் கூறியது:

இந்தியாவில் நடக்கும் 19 வது சீசன், கிரிக்கெட் லீக் தொடர், சமதளமான ஆடுகளங்கள், ஒவ்வொரு அணியும் ரன் மழை பொழிவது என, எல்லாம் நான் எதிர்பார்த்தபடியே சிறப்பாக துவங்கியுள்ளது.

இதில் ரோகித், கோலி போன்ற ‘சீனியர்’ சூப்பர் ஸ்டார்களின் ஆட்டத்தை காண்பது ஆர்வமாக இருக்கும். ஆனால், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் தான், இத்தொடரில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார் என நினைக்கிறேன்.

முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளாசி ரன்குவிக்கும் இவர், ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ளார். இத்தொடர் முடிவதற்குள், உண்மையான ‘சூப்பர் ஸ்டாராக’ உருவெடுக்க வாய்ப்புள்ளது. இவர் எப்படி விளையாடப் போகிறார் என்பதை காண ஆர்வமாக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link