புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த, எட்டாம்

புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த, எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, 51 கல்வியாளர்கள் அடங்கிய குழு கடிதம் எழுதியுள்ளது. இதில், கல்வி சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., வடிவமைத்து வருகிறது.

இந்நிலையில் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் ‘நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் நீதித்துறையில் ஊழல் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது, சர்ச்சையானதால் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. புத்தகத்தை தயாரித்த என்.சி.இ.ஆர்.,டி.,க்கு கண்டனம் தெரிவித்ததுடன், புத்தகத்தை அச்சிடவும் தடை விதித்தது.

இதுதவிர, பாடத்தை தயாரித்த மூன்று கல்வியாளர்களையும் எந்தவொரு கல்வித்திட்டங்களிலும் சேர்க்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து 51 கல்வியாளர்கள் அடங்கிய குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் கல்வியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

என்.சி.இ.ஆர்.டி.,யின் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் மீதான தடை, நீதித்துறையின் அத்துமீறலாக நாங்கள் கருதுகிறோம். கல்வி மற்றும் பாடத்திட்டம் தொடர்பான முடிவுகளை கல்வியாளர்களே எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தலையீடு என்பது கல்விச் சுதந்திரத்தைப் பறிப்பதாக அமைந்துள்ளது.

எனவே, என்.சி.இ.ஆர்.டி.,யின் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் மீதான தடையை நீக்க, மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் உச்ச நீதிமன்றத்தை கோர வேண்டும்.

சர்ச்சைக்குரிய நீதித்துறை அத்தியாயத்தை மட்டும் நீக்கிவிட்டு, மீதமுள்ள பாடங்களை ஆன்லைனில் உடனே வெளியிட அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link