புதுடில்லி: புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதிகபட்சமாக புதுச்சேரியில் 91.23 சதவீதம், அசாமில் 85 சதவீதம், கேரளாவில் 78 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 117 சுயேச்சைகள் உட்பட 294 பேர் போட்டியிட்டனர். ஆளும் என்.ஆர்.காங். – பா.ஜ., கூட்டணி, தி.மு.க. – காங். ‘இண்டி’ கூட்டணி, விஜயின் த.வெ.க., சீமானின் நா.த.க. இடையே நான்கு முனை போட்டி நிலவியது.
மாநிலத்தின் 9.50 லட்சம் வாக்காளர்களுக்காக, 1,099 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டன. 1,099 மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 4,836 அரசு ஊழியர்கள், 2,791 போலீசார், 2,198 தன்னார்வலர்கள் தேர்தல் பணி செய்தனர். பெண்கள் நிர்வகித்த ஓட்டுச்சாவடிகளுக்கு, ‘பிங்க்’ என பெயரிடப்பட்டது.
காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஓட்டு பதிவு சற்று குறைந்தது. மாலை 3:00 மணிக்கு மேல் வேகம் எடுத்தது. இறுதியில், முன் எப்போதும் இல்லாத அளவில் 91.23 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 2011ல் 85.57 சதவீதம் பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2021 தேர்தலில் 83.42 சதவீத ஓட்டுகள் பதிவானது.
மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அசாம்
அசாமில் 126 தொகுதிகள் உள்ளன. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். சிறுபான்மையினர் அதிகம் உள்ள 16 தொகுதிகளில் 90 சதவீதம் பேர் வாக்களித்தனர். 83 தொகுதிகளில் 89 சதவீதமும், எஞ்சிய தொகுதிகளில் 79 சதவீதம் வரையிலும் ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்தமாக நேற்று மாலை நிலவரப்படி 85.21 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக தால்காவ் தொகுதியில் 95.53 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்த வேட்பாளர்கள் 722 பேர். பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் பா.ஜ. கட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங். கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. 2.50 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 1.25 கோடி பேர் பெண்கள், 318 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
மாநிலத்தின் 35 மாவட்டங்களில் 31,490 சாவடிகள் அமைக்கப்பட்டன. ”அதிக ஓட்டுகள் பதிவாகி இருப்பது அசாதாரணமல்ல; வரலாற்று சிறப்பு வாய்ந்தது,” என, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கேரளா
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணி, காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ. இடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்த தொகுதிகள் 140. இரவு 7:00 மணி நிலவரப்படி 78 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
கடந்த 2021ல் 74.06 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 1987ல் 80.54 சதவீத ஓட்டுகள் பதிவானதே இதுவரை அதிகபட்சம். ஒரு சில இடங்களை தவிர, மாநிலம் முழுதும் சட்டசபை தேர்தல் மிக அமைதியாக நடந்தது.
தமிழகம் உள்பட ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது.
