உள்நாட்டு விமானங்களுக்கு சலுகை லேண்டிங் கட்டணம் 25% குறைப்பு

புதுடில்லி, :உள்நாட்டு விமானங் களுக்கான விமான லேண்டிங் மற்றும் நிறுத்துமிட கட்டணங்களை 25 சதவீதம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

மேற்காசிய போரால், விமான எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கூடுதல் செலவுகள் விமான நிறுவனங்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன. உள்நாட்டு விமான நிறுவனங்கள் சந்தித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, இந்தியாவிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் மற்றும் நிறுத்துமிட கட்டணங்களை 25 சதவீதம் குறைக்க, இந்திய விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. தற்போதைய நிலையில், இந்த சலுகை உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மட்டுமே பொருந்தும்.

முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு இந்த கட்டண குறைப்பு அமலில் இருக்கும். அதன் பிறகு சூழலை பொறுத்து இது மறுபரிசீலனை செய்யப்படும். இந்த கட்டண குறைப்பால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு குறையும். இது மறைமுகமாக பயணிகளுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link