மும்பை : டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் யோசனைக்கு, அந்நிறுவனத்தை கட்டுப்படுத்தி வரும் டாடா டிரஸ்ட்ஸின் துணை தலைவர் வேணு சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். டாடா டிரஸ்ட் அறங்காவலர் ஒருவர் இந்த யோசனைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தை ‘பெரிய வகை வங்கி சாரா நிதி நிறுவன’மாக ரிசர்வ் வங்கி வகைப்படுத்தினால், பங்குகளைப் பட்டியலிடுவதை தவிர வேறு வழியில்லை.
‘நிறுவனத்தின் பங்குகளை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் வாயிலாக, முடங்கி கிடக்கும் தங்கள் பங்குகளை சிறுபான்மை பங்குதாரர்கள் பணமாக்க முடியும். மேலும், டாடா சன்ஸ் வளர்ச்சிக்கு தேவையான மூலதனத்தை பெறுவதற்கும் இது வழி வகுக்கும்’ என்றார்.
இது, இந்த விவகாரத்தில் டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதை காட்டுவதாக கூறப்படுகிறது.
