உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவின் மீனாட்சி, பிரீத்தி, பிரியா, அருந்ததி, தங்கம் வென்றனர்.
மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, மங்கோலியாவின் நோமுன்டாரி என்க்-அம்காலன் மோதினர். இதில் மீனாட்சி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்தார்.
மற்றொரு பைனலில் (54 கிலோ) இந்தியாவின் பிரீத்தி பவார், சீனதைபேயின் ஹுவாங் ஹசியாவ்-வென் மோதினர். இதில் பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார்.
இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ) 3-0 என, வடகொரியாவின் வோன் உன்-கியோங்கை தோற்கடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் அருந்ததி சவுத்ரி (70 கிலோ) 4-1 என, கஜகஸ்தானின் பகித் செய்திஷை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), அல்பியா பதான் (+80 கிலோ) வெள்ளி வென்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 10 பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் நிகாத் ஜரீன் (54 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), லவ்லினா (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ) வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ் (48 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ) பங்கேற்கின்றனர்.
