புதுச்சேரி / புதுடெல்லி: புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
