காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளரை ஆதரித்து, த.வெ.க., தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகளில், த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெறும் கூட்டத்தில், விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து சாலை வழியே காரைக்குடிக்கு விஜய் செல்கிறார்.
காரைக்குடியில் விஜயின் பிரசாரத்துக்கு, இன்று மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரி அனுமதி அளித்துள்ளார். பிரசாரத்தின்போது, 20 டாக்டர்கள், 200 தன்னார்வலர்கள் ‘வாக்கி டாக்கி’யுடன் இருக்க வேண்டும்; இலவச பொருட்கள் வழங்கக்கூடாது; போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட 37 நிபந்தனைகளை, தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர்.
விஜய் பிரசாரம் செய்யும் இடத்தில், மரங்களில் தொண்டர்கள் ஏறுவதை தடுக்கும் வகையில், மரங்களை சுற்றி தகர ஷீட் போடப்பட்டது; அங்குள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
