'ரூ.3 லட்சம் கொடுங்ண்ணா…' செந்தில் பாலாஜியிடம் ரகளை

கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் வழிபாடு செய்து திரும்பிய, கோவை தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியின் கையை பிடித்து இழுத்த கோவில் பணியாளர், ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் காலையில், பெரியகடை வீதியிலுள்ள கோனியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

உடன்பிறப்புகளும் உடன் சென்றனர். வெற்றி வேண்டி கண்மூடி பிரார்த்தனை செய்து, தரிசனம் முடித்தபின் கிளம்பினார். வாசலை நெருங்கும் முன் திடீரென ஒருவர் ஓடிவந்து, செந்தில் பாலாஜியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அதிர்ச்சியான செந்தில், அவரை ஆர்வக்கார உ.பி., என நினைத்து, ‘கையை விடுங்க’ என சிரித்தபடி சொன்னார். அந்த நபரோ, இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, “அண்ணா, விட மாட்டேங்ணா… மூணு லட்ச ரூபாய்க்கு மேல உங்க கவர்மென்டுக்கு கொடுத்திருக்கேங்ணா. அந்த காச திருப்பி கொடுங்ண்ணா…” என்று உரத்த குரலில் மன்றாடினார்.

குழப்பமான செந்தில் பாலாஜி, “யார்ங்க இந்தாளு? மூணு லட்சம் குடுத்தேங்றார்..” என்று கோவில் ஊழியரை கேட்டார். அவர் பதறியபடி, “சார், அவர் நம்ம கோவில் தற்காலிக ஸ்டாப்தான். ராமுன்னு பேரு. நெய் தீபம் விற்கிறவர்…” என்றார். ராமு குடித்திருக்கிறார் என்பதையும் சைகையால் தெரிவித்தார்.

கடுப்பான செந்தில் பாலாஜி, ‘குடி’மகனின் கைகளை வேகமாக உதறினார். உடன் வந்தவர்கள் ராமுவை இழுத்து அப்புறப்படுத்தினர்.

இதற்குள் கோவில் அதிகாரி ஓடிவந்தார். அவரிடம், “குடிச்சிட்டு வர்றவங்கள எப்டி கோவிலுக்குள்ள விடுறீங்க?” என்று எரிச்சலாக கேட்டுவிட்டு செந்தில் வெளியேறினார். கோவிலுக்குள் மது போதையில் பணி செய்ததாக ராமு ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.

Source link