சீமானின் பஞ்சதந்திர கதைகள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் தேர்தல் பிரசாரத்தில், குட்டிக்கதைகள் சொல்லி, ‘இலவசங்கள் வேண்டாம்’ என்பதை வலியுறுத்தி வருகிறார்.

அதன் விபரம்:

கங்காரு குட்டி – சோம்பேறித்தனம்

தாயின் பையிலேயே தங்கி சோம்பேறியான கங்காரு குட்டி, வெளியே வர மறுத்ததால் தாயும் குட்டியும் இறந்தன. அதுபோல், இலவசங்களை நம்பி, மக்கள் சோம்பேறியாகக் கூடாது; உழைத்து வாழ பழக வேண்டும்.

குதிரையும் லாடமும் – மறைமுக சுரண்டல்

தன்னை ஓட்டுபவர், தன் மீது வைத்த பாசத்தால், தனக்கு லாடம் கட்டுவதாக குதிரை நினைத்தது. ஆனால், தன் மீது ஏறி அதிக துாரம் பயணிக்கவும், வேலை வாங்குவதற்காகவும் தான் என்பது பின்னால் தான் குதிரைக்கு புரிந்தது. அதேபோல், தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தரும் இலவசங்கள் பாசத்தால் அல்ல; உங்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க தான்.

ஓநாயும் கத்தியும் – சுய அழிவு

கத்தியில் தடவப்பட்ட ரத்தத்தை நக்கும் ஓநாய், தன் நாக்கு பிளந்து அதில் வரும் ரத்தத்தையே சுவைப்பதை அறியாமல் இறக்கும்.

அதுபோல், அரசு தரும் இலவசங்கள் உங்கள் வரிப்பணமே; அதாவது உங்கள் ரத்தமே என்பதை உணர வேண்டும்.

திருடனும் நாயும் – அடையாளம் காணுதல்

வீட்டிற்கு தைரியமாக ஒருவன் திருட வந்ததை பார்த்த நாய், அவன் எஜமானனுக்கு வேண்டப்பட்டவன் என, முதலில் நினைக்கிறது. ஆனால், திருடன் வீசும் எலும்புத் துண்டை கண்டதும், அவன் திருடன் என புரிந்துகொண்டு அவனை கடித்தது.

அதுபோல், ஓட்டுக்கு பணம் கொடுப்பவன், உங்களிடம் திருட வருகிறான் என்பதை உணர்ந்து, அவனை துடைப்பத்தை கொண்டு விரட்டியடிக்க வேண்டும்.

நரியும் போர்வையும் – ஏமாற்று அரசியல்

ஆடுகளுக்கு போர்வை தருவதாகக் கூறி, அவற்றின் தோலையே நரிகள் உரித்தன. அதேபோல், இலவசங்களை வழங்கிவிட்டு மின் கட்டணம், சொத்து வரி உயர்வு வாயிலாக, உங்கள் ப ணத்தை அரசு பிடுங்கிக் கொள்கிறது.

Source link