தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06ஆம் தேதி (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் அடுத்த கட்டமாகத் தேர்தல் பரப்புரைக்கு த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (10.04.2026) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “10.04.2026 – வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணிமண்டபம் அருகே, நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் விஜய்யின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் காணலாம். அதே சமயம், அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
