தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06ஆம் தேதி (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (10.04.2026) சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதாவது சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கினர்.
அதன்படி அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணித்த அவர் டி.எம்.எஸ். ரயில் நிலையம் வரை சென்று பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்து, மீண்டும் திமுக ஆட்சி அமைய ஆதரவு தருமாறு பயணிகளிடம் அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மெட்ரோ ரயிலில் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரோடு கைகுலுக்கியும், செல்பி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அத்தொகுதியின் திமுக வேட்பாளாருமான எழிலனும் உடன் இருந்தார். அதே சமயம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நடைப்பயிற்சியின் போது, சாலையோரம் அமைந்துள்ள டீக்கடைகளில் பொதுமக்களுடன் அமர்ந்தும் எளிய முறையில் வாக்கு சேகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
