ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், அமைச்சருமான முத்துசாமியை ஆதரித்து தி.மு.க பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி வெள்ளோடு நால்ரோட்டு பகுதியில் நேற்றிரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய எம்.பி கனிமொழி, “எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்க முடிகிறது. பா.ஜ.க – வுடன் கூட்டணி வைத்த நிறைய பேர் என்ன ஆனார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பீகாரில் பலமுறை முதலமைச்சராக இருந்தவர் இன்று ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்கிறார்.
இது போன்று எத்தனையோ கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அதே போன்று அமித் ஷா மனது வைத்தால் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு எடப்பாடி பழனிசாமி கவர்னராகலாம். ஒருபோதும் முதல்வராக முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பயம், ஜுரத்தைத் தொடர்ந்து தற்போது ஜன்னி வந்து விட்டதால் என்ன பேசுகிறோம், யாரை பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தரத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் மூன்றாம் தர பேச்சாளர்போல எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
