விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற இருவர் விபத்தில் சிக்கி காயம்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06ஆம் தேதி (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அடுத்த கட்டமாகத் தேர்தல் பரப்புரைக்கு த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (10.04.2026) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று பிரச்சாரம் செய்வதற்காக த.வெ.க தலைவர் விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்குக்  காலை 10 மணியளவில் வந்தடைந்தார். 

அப்போது அங்கிருந்த த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மதுரை – திருமங்கலம் பைபாஸ் சாலையில் விஜய் தனது பரப்புரை வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் பலர் விஜய்யை பின் தொடர்ந்து சென்றனர். அதன்படி விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் இருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருவரும் உடனடியாக  மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

Source link