நமது நிருபர்அறப்போர் இயக்க பேரணிக்கு தடை விதித்துள்ள சென்னை ஆதம்பாக்கம் போலீசார், 'ஓட்டுக்கு பணம்

நமது நிருபர்

அறப்போர் இயக்க பேரணிக்கு தடை விதித்துள்ள சென்னை ஆதம்பாக்கம் போலீசார், ‘ஓட்டுக்கு பணம் வாங்காதே’ என்று பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை அறப்போர் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஏப்.,11 மாலை 4 மணி முதல் 6 மணி வரை, ஆதம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வீடு வீடாக சென்று பிரசாரம், விழிப்புணர்வு பேரணி நடத்த போலீஸ் அனுமதி கோரினர். ஆனால், அவர்களுக்கு சென்னை ஆதம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு போலீசார் விசித்திரமான காரணத்தையும் தெரிவித்துள்ளனர்.

‘ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருள் வாங்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தால், குடிசைப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்வர்; அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பேரணி செல்ல அனுமதியில்லை’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு 5 நபர்கள் மட்டும் கலந்து கொள்ளவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் 4 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ‘ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்’ என்று மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது வரை தமிழகத்தில் எந்த பகுதியிலும் மக்கள் இந்த பிரசாரத்தில் எந்த பிரச்னையும் செய்ததில்லை. பிரசாரத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என்று தங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பின்னர் எப்படி உங்கள் பகுதியில் மட்டும் மக்கள் பிரச்னை செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் குடிசை பகுதி மக்களை குறிப்பிட்டு இவ்வாறு அவதூறு செய்வது ஏன்? இப்படிப்பட்ட ஒரு தரங்கெட்ட அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அறப்போர் இயக்கத்தின் பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணைய அதிகாரி யாருக்காக வேலை செய்கிறார்?

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாக எத்தனை இன்ஸ்பெக்டர்கள் களம் இறங்கினாலும், எத்தனை தேர்தல் அதிகாரிகள் ஆட்டம் போட்டாலும் அறப்போர் இயக்கத்தின் பிரசாரம் தொடரும். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று தொடர்ந்து மக்களிடம் சொல்லிக் கொண்டே இருப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source link