யார் இவர்? – ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் முகுல். மித வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். ஆனால், தனது அதிரடி பாணி ஆட்டத்துக்காக அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளார்.
கடந்த 2025-26 சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 5 இன்னிங்ஸில் 173 ரன்களை விளாசி இருந்தார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.55. காயம் காரணமாக வெளியேறிய கார்த்திக் சர்மாவுக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் அவர் அந்த தொடரில் விளையாடி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான் அவரது ரோல்மாடல். அவரது பாணியில் முகுல் சவுத்ரி சிக்ஸர் விளாசியது அதற்கு சான்று.
மேட்ச் வின்னர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான ஆட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நான்கு ஓவரில் அந்த அணியின் 54 ரன்கள் தேவைப்பட்டது. அழுத்தம் மிக்க அந்த தருணத்தில் லக்னோ அணிக்கு சாதகமாக ஆட்டத்தை பினிஷ் செய்து கொடுத்தார் முகுல் சவுத்ரி. 8-வது விக்கெட்டுக்கு ஆவேஷ் கான் உடன் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் முகுலின் பங்கு 52 ரன்கள். இந்த இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அதில் இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
