கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜ தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. இன்று பாஜவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
* மேற்குவங்க எல்லை வழியாக பசு மாடு கடத்தப்படுவதை தடுப்போம்.
* ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேற்குவங்க மாநிலத்தின் வளமான கலாசார பாரம்பரியத்தைப் பரப்ப அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* மேற்குவங்க மாநில அரசின் அனைத்துப் பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.
* வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி.
* மேற்குவங்கத்தில் நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.
* போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.15,000; ஊழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு.
* ரவீந்திரநாத் தாகூர் பெயரில் கலாசார மையம் அமைக்கப்படும்.
வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு, அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தின் இருண்ட காலத்தை நீக்கி, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதே இலக்கு. இந்த தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடி கனவு காணும் வளர்ந்த இந்தியாவிற்கான செயல் திட்டம். மக்கள் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். மக்கள் மனப்பூர்வமான மாற்றத்தை விரும்புகிறார்கள். பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுடனான தொடர்பு காரணமாகவே முதல்வராக மம்தா பானர்ஜி மூன்று முறை பதவியேற்றார்
கம்யூனிச அரசை அகற்றுவதற்காக, மேற்குவங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜியை தேர்ந் தெடுத்தனர். 5 ஆண்டுகள் போதாது என்று கூறிய அவருக்கு, மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கும்பல்கள், குண்டர்கள் மற்றும் ஊடுருவல்காரர்களின் உதவியுடன், அவர் மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தார். இன்று, ஒரு காலத்தில் மம்தாஜியை ஆதரித்த அதே மக்கள் அச்சமும் ஏமாற்றமும் அடைந்து, மாற்றத்தை நாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
