“பதவியை ராஜினாமா செய்கிறேன்” – சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் மூட்டை மூட்டையாகப் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே,  இது தொடர்பாக விசாரணை நடத்தப் பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அதனைத் தொடர்ந்து, ரகசிய அறிக்கையை சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். மேலும் இந்த விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்கள் மற்றும் நாடாளுமன்ற பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு மத்தியில், இன்று (10.04.2026) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோப்புப்படம்

அதாவது நீதிபதி யஷ்வந்த் வர்மா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், “மிகுந்த மனவேதனையுடன் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனக்  குறிப்பிட்டுள்ளார். மற்றொருபுறம் இது குறித்து உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில், நீதிபதி வர்மாவின் விளக்கம் திருப்திகரமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த பதவி நீக்க விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு எதிரான நாடாளுமன்ற பதவி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link