குடியாத்தத்தில், நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது அந்த வழியாக சவஊர்வலம் சென்றது. நல்ல சகுனம் என கையெடுத்து வணங்கிய அவர், குடியாத்தத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில் வேலுார் மாவட்டம், குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரதாப்பை ஆதரித்து தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
வெற்றி நிச்சயம்
எனது சொந்த ஊரான குடியாத்தம் வந்தவுடனே எனக்கு புது புத்துணர்ச்சி வருகிறது. என்னோட பூர்வீகம் அருகில் உள்ள செம்பேடு கிராமம் தான். எனது சொந்த மண்ணில் உங்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விஜயகாந்த் இந்த ஊர் மாப்பிள்ளை. குடியாத்தம் தொகுதி மிக முக்கியமான தொகுதி காமராஜருக்கு வெற்றி தந்த தொகுதி. தேசிய கொடியை உருவாக்கிய புனிதமான மண். இந்த நேரத்தில் மண்ணில் மகளாக பெருமையாக சொல்கிறேன்.
இங்கு யார் போட்டியிட்டாலும் கேப்டன் தான் களத்தில் இருக்கிறார் என நினைத்து வாக்களிக்க வேண்டும். நிச்சயம் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்று உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நடைபெறுகிறது.எத்தனை அணி இருந்தாலும் நமது கூட்டணி வெற்றி பெற்று அண்ணன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
தே.மு.தி.க.,விற்கு மட்டுமல்ல தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் கட்சிக்காகவும் பிரசாரம் செய்து வருகிறேன். அண்ணா சொன்னது போல கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட கட்சி இது இதை தான் கேப்டன் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இங்கு உள்ள அனைத்து ஊர்களும் எனக்கு நன்றாக தெரியும். எந்த பழசையும் மறப்பவள் கிடையாது .இவ்வாறு அவர் பேசினார்.
பிரேமலதா பேசிக் கொண்டிருக்கும்போது ‘இடையில் சவ ஊர்வலம் வந்தது. அதை பார்த்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டர்களை அமைதியாக இருக்கும்படியும் சவ ஊர்வலத்திற்கு வழி விடும்படி தெரிவித்தார்.
அதோடு தன்னைக் கடந்து சென்ற சவ ஊர்வலத்திற்கு கையெடுத்து கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.பொதுவாக நல்ல விஷயத்திற்கு செல்லும்போது சவ ஊர்வலம் வந்தால் நல்ல சகுனம் என சொல்வார்கள். அந்த வகையில் இப்போது குடியாத்தத்தில் வெற்றி உறுதி என கூறினார்.
