முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஒ.பி.எஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று கூறிய நிலையில், இதற்கு தற்போது அக்ரி கிருஷ்ண மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நேற்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர் பேசிய எஸ்.பி வேலுமணி ஓபிஎஸ் அவர்களை மீண்டும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களை எவ்வாறு மீண்டும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முடியும்? ஓபிஎஸ் அவர்களை இணைக்க வேண்டும் என்று சொல்லும் வேலுமணி—நாளைக்கு முத்துசாமி, கண்ணப்பன், ரகுபதி மற்றும் சேகர் பாபு ஆகிய அனைவரையும் கூட இணைக்க வேண்டும் என்று சொல்வார்.
இது இல்லாத ஒரு ஊருக்கு வழி தேடுவது போல் உணர்த்துகிறது. எந்தவொரு பொதுவான அல்லது பொறுப்பற்ற கருத்தையும் சாதாரணமாகத் தெரிவிக்கக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. ஒ.பி.எஸ். திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இரட்டை இலைக்கு எதிராக வெற்றி பெற்றவர். அவரை எப்படி மீண்டும் அதி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியும்?
அதேபோல், டிடிவி தினகரன் அவர்களையும் இந்த இயக்கத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் நம்முடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2026 பொதுச்சட்டமன்றத் தேர்தலில், அவர் நமது கூட்டணியில் இணைந்து, நமது கூட்டணி வேட்பாளர்களுக்காக பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார். சமீபத்தில் முடிவடைந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கூட, அதிமுக வேட்பாளர்களுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
தினகரன் ஏற்கனவே தனியாக ஒரு இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் எடப்பாடியாருடன் நெருக்கமான மற்றும் அன்பான உறவைப் பேணி வருகிறார், மேலும் இரண்டு இயக்கங்களும் இணைந்து செயல்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அவர் ஏன் இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்?
அதேபோல், சசிகலா அவர்களைப் பொறுத்தவரையில், அவர் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார். மீண்டும், 2026 பொதுச்சட்டமன்றத் தேர்தலின் போது, அவர் தனியாக ஒரு இயக்கத்தைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, அந்த வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். இது மாநில மக்களுக்கு மட்டுமின்றி, நமது கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்கு தெரிந்த ஒன்று.
டிடிவி தினகரனும் எடப்பாடியாரும் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பது நமது நிர்வாகிகளுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) நிர்வாகிகளுக்கும் மிகநன்றாகத் தெரியும். அரசியல் வன்மம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வேலுமணி இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆட்சியை மலரச் செய்வோம் என்று வேலுமணியும், தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையில் அந்த எண்ணம் இருந்திருந்தால், அவர்கள் ஏன் த.வெ.க ஆட்சியை ஆதரித்தார்கள்? அதிமுக பொதுச்செயலாளரின் உத்தரவை மீறி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக அவர்கள் ஏன் வாக்களித்தார்கள்? அவ்வாறு வாக்களித்துவிட்டு, எந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று இப்போது கூறுகிறார்கள்?
இது எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது, அதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, எம்.ஜி.ஆர் மாளிகையில் உள்ள கட்சித் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் எடப்படியார் தலைமையில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய, எடப்பாடியார், ஒவ்வொரு நிர்வாகியையும் நேரில் அழைத்து அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட பெரும்பான்மையான ஒருமித்த கருத்தின் அடிப்படையில்—ஒரு கூட்டு முடிவாக—2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவு இறுதி செய்யப்பட்டது. எடப்பாடியார் அந்த முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. அந்த விவாதங்கள் நடந்தபோது நாங்கள் அனைவரும் உள்ளேதான் இருந்தோம். பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் வேறு யாருமல்ல, வேலுமணி தான் என்பதை இந்த நேரத்தில் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.
இத்தகைய சூழ்நிலையில், ஓபிஎஸ் அவர்களை இந்த இயக்கத்தில் இருந்து நீக்கியதும் அவர்கள்தான்சசிகலா அவர்களை இந்த இயக்கத்தில் இருந்தும் அவரது பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியதும் அவர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
