Chennai Rains Today LIVE Updates: சென்னையில் கனமழை எதிரொலி: பூண்டி, புழல் ஏரிகளுக்கு அதிகரிக்கும் நீர்வரத்து

Chennai Rains Live Updates

தேசிய பேரிடர் மீட்புப் படை குழு சென்னை வருகை

சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் இருந்து ஒரு சிறப்புக் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த இக்குழு களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் மீட்புக் குழுவினர் கூடுதல் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும்

சென்னையில் இன்றும் (அக். 18) நாளையும் (அக். 19) கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது

  • Oct 18, 2026 07:52 IST

    இது சாதாரண மழையாக எடுத்துக்கொள்ள முடியாது:

    அமைச்சர் திரு ஆதவ் அர்ஜுனா, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு,  சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தினைப்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து  இராயபுரம் மண்டலம், பிராட்வே குறளகம் சந்திப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

    ”முதலமைச்சர் ஒவ்வொரு மணிநேரமும் நடவடிக்கைகளை கேட்டறிந்து கொண்டு இருக்கிறார். இது சாதாரண மழையாக எடுத்துக்கொள்ள முடியாது. வழக்கமாக 69 செ.மீ மழை தான் பெய்யும். ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை 35.8 செ.மீ மழை பெய்துள்ளது. உதவி தேவைப்பட்ட “1913” எண்ணில் அழைக்கலாம்” என்றார்.

  • Oct 18, 2026 07:44 IST

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக, சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (18.10.2026) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • Oct 18, 2026 07:39 IST

    இந்த அளவுக்கு அதிக மழையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை: சமீரன் பேட்டி

    சென்னையில் தீவிரமடைந்து வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி .எஸ். சமீரன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

    ”17 – 21ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது.. ஆனால் இந்த அளவுக்கு அதிக மழையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

  • Oct 18, 2026 07:37 IST

    அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது

    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், நகரில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் இன்று காலை 6 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

    மழை நீர் தேங்காத வண்ணம் முற்கேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் எத்தகைய தடையுமின்றி பயணிக்க முடிகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  • Oct 18, 2026 07:37 IST

    அவசர உதவிக்கு ‘1913’ என்ற எண் அறிவிப்பு

    சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.  

    இதன்படி, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மழைநீர் தேங்கினாலோ அல்லது வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ ‘1913’ என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Oct 18, 2026 07:36 IST

    கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு

    சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 

    குறிப்பாக, கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Oct 18, 2026 07:36 IST

    வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

    சென்னையில் விடிய விடிய பெய்த இடியுடன் கூடிய கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நள்ளிரவு முதலே மாநகராட்சி நிர்வாகம் தீவிர சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்

  • Oct 18, 2026 07:36 IST

    சென்னையில் அதிகனமழை எதிரொலி: மின் கசிவு விபத்துகள் தீவிரம்

    சென்னையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக, திருவொற்றியூர், சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. உடனடியாகத் விரைந்த தீயணைப்புப் படையினர் அந்த மரங்களை அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

    மேலும், தியாகராய நகர் உள்பட 4 இடங்களில் சாலையோர மின் இணைப்புப் பெட்டிகளில் மின் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த விபத்துகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Oct 18, 2026 07:35 IST

    பாரிமுனையில் அதிகபட்சமாக 36.1 செ.மீ. பதிவு

    சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

    இதனைத் தொடர்ந்து, கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 28.4 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ., திருவொற்றியூரில் 22.3 செ.மீ., மற்றும் எண்ணூரில் 21.5 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

  • Oct 18, 2026 07:35 IST

    பூண்டி, புழல் ஏரிகளுக்கு அதிகரிக்கும் நீர்வரத்து

    சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பூண்டி ஏரிக்கு நேற்று 290 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 980 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில், தற்போது 21.47 அடிக்கு நீர்மட்டம் பதிவாகியுள்ளது.

    அதேபோல், புழல் ஏரிக்கும் நீர்வரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று 663 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1485 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் பாரிமுனையில் அதிகபட்சமாக 36.1 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Source link