தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை!

வட கிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. 

இந்த நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். இந்த அத்தனை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் மற்ற தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அதே சமயம் அக்டோபர் 19-ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கையும், அக்டோபர் 20-ஆம் தேதி மீண்டும் மிக கனமழைக்கான எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 21 முதல் 24 வரை கனமழைக்கான எச்சரிக்கை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.