சந்தையில் உயர்ந்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு, ரேசன் கடைகள் மூலம் கிலோ ரூ. 30 என்ற மானிய விலையில் சன்ன ரக அரிசி விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சில்லறை விநியோகத்தில் விற்கப்படுகின்ற அரிசியின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சன்னக அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த வாரம், கர்நாடகா பொன்னி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ரேசன் கடைகள் மூலம் கிலோ ரூ. 30 என்ற மானிய விலையில் சன்ன ரக அரிசி விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் சனிக்கிழமை சென்னையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தற்போது, சன்ன ரக அரிசி சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடி கடைகளிலும், 19 கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்தத் திட்டத்திற்காக 25,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 250 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுகர்வோர் அல்லது குடும்ப உறுப்பினரும் அதிகபட்சமாக 5 கிலோ வரை சன்ன ரக அரிசியை வாங்கிக் கொள்ளலாம்.
அரிசியைத் தவிர, வெளிச்சந்தையில் துவரம் பருப்பும் கிலோ ரூ. 170 முதல் ரூ. 190 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு கடைகளில் கிலோ ரூ. 130-க்கு துவரம் பருப்பு விற்பனை செய்யவும் அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
