பா.ம.கவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை அன்புமணி ஒதுக்கியிருந்ததை எதிர்த்து ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். அதில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உரிமையியல் விசாரித்ததை தொடர்ந்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு நேற்று முன்தினம் (08-04-26) சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் வழக்கமான பட்டியலின்படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ராமதாஸ் தரப்பு மீண்டும் முறையிட்டது. அதன்படி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி தமிழ்ச்செல்வி ஒப்புதல் தெரிவித்து விசாரித்து வருகிறார். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (10-04-26) வந்தது. அப்போது அன்புமணி தரப்பில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில், விதிகளின்படி தான் இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கட்சியின் அங்கீகாரம் இழந்ததை அடுத்து ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தி வந்த காரணத்தினால் தான் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும் வாதிடப்பட்டது. மூன்று தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, ராமதாஸ் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் அன்புமணியின் பா.ம.க வேட்பாளர்களுக்கே மாம்பழம் சின்னம் என்பது உறுதியாகியுள்ளது.
