பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
தேவாவின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் விஜய் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து கலக்கத்துடன் பேசினார். அவர் பேசியதாவது, “ எப்போதும் அவரை அண்ணன் என்று தான் அழைப்பேன். அடிக்கடி போனில் பேசுவேன். ஒருவேளை என்னுடைய போனை எடுக்க விட்டால் அதைப் பார்த்தவுடன் உடனடியாக போன் பண்ணி என்ன விஷயம் என்று கேட்பார். எனக்கு 15 வயது இருக்கும் போதிலிருந்தே அவர் பழக்கம். அப்போதெல்லாம் சைக்கிளில் என்னுடைய வீட்டுக்கு வருவார். சொந்த சகோதரர் போல் உட்கார்ந்து பேசிவிட்டு, என் அம்மா கையில் சாப்பிட்டு விட்டு செல்வார்.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வந்திருந்தார். இசையமைப்பாளராக உயர்ந்த பின்னும் துளிகூட கர்வம் இல்லாமல் இருந்தார். எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பேசுவார். அவர் மிகச்சிறந்த பக்திமான். அது சம்பந்தமான கதாபாத்திரத்தில் நான் ஏதாவது நடித்தால் உடனே போன் செய்து பாராட்டுவார். சமீபத்தில் ஒரு சிவன் பாடலுக்கு இசையமைத்திருந்தார். அதில் நான்தான் நடிக்க போகிறேன் என்று சொன்னவுடன் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். கோபாலகிருஷ்ணன் சார் நாடகத்தில் மோசஸ் தேவா என்ற பெயரில் மறைந்த சந்தர்போஸ் அண்ணனும் தேவா அண்ணனும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
சிறந்த கலைஞர் சிறந்த மனிதர் யார் மனமும் புண்படாதபடி பேசுபவர். இறைவனை துதிப்பதில் அவ்வளவு ஒரு ஈடுபாடோடு இருந்தவர். திருநீறு குங்குமம் இல்லாமல் இருக்கவே மாட்டார். இறைவனை வணங்கினார், இறைவனை தொழுதார், இறைவனிடம் சென்றார், இப்போது இறைவனாகவே ஆகி விட்டார். அண்ணனுடைய நினைவுகள் நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மங்காது. மகன் ஸ்ரீகாந்த் தேவா பெரிய இசையமைப்பாளராக மாறிவிட்டதை அவர் பார்த்து விட்டார். ஒரு மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டார்.
நான் தேசிய விருது வாங்கியவுடன், நீ வாங்கியதில் எனக்கு பெரிய அதிர்ச்சி இல்லை தம்பி சந்தோஷப்படுகிறேன், நீ தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்தார். திரையுலகில் கானா பாடலை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஒரு அந்தஸ்தையும் ஏற்படுத்தி கொடுத்தார். மிகச்சிறந்த ஒரு மனிதரை இழந்திருக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு இறைவன் தான் இதை தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையை தர வேண்டும்” என்றார்.
