சென்னை கனமழைக்கு மேகவெடிப்பு காரணமா? – வானிலை மையம் விளக்கம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. வட சென்னையில் மட்டும் 5 இடங்களில் 21 செ.மீ. மேல் மழைப் பதிவாகியது. அதிகபட்சமாகப் பாரி முனையில் 35 செ.மீ. பதிவாகியது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகியது. 

இந்த கன மழைக்குக் காரணம் மேகவெடிப்பா என அனைவருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அப்படி இல்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது, “மேக வெடிப்பு என்றால் 20 முதல் 30 சதுர கி. மீ. பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் அல்லது அதற்கு மேல் மழை பெய்தால் தான் மேக வெடிப்பு எனச் சொல்லலாம். ஆனால் இப்போது நமக்கு மேல் மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. அதன் சுழற்சி மற்றும் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டால் தான் நேற்று இரவு கன மழை பெய்திருக்கிறது” என்றுள்ளது.