சென்னையில் கொட்டித் தீர்த்த அதி கனமழை: இது மேக வெடிப்பா? உண்மையான காரணத்தை வெளியிட்ட வானிலை மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு ஒரே நேரத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. சென்னையின் மையப்பகுதியில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலும், புறநகர்ப் பகுதிகளான சென்னை எண்ணூர் மற்றும் திருவள்ளூர் போன்ற இடங்களில் 30 சென்டிமீட்டர் அளவுக்கும்கூட அதி கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலுக்குப் பிறகு, குறுகிய நேரத்தில் பதிவான மிகத்தீவிரமான மழையாக இது பார்க்கப்படுகிறது. இதனால் நகரின் பல தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சென்னை மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற வடக்கு உள் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

ஒரே இரவில் குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் மழை கொட்டியது ஒரு ‘மேகவெடிப்பு’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால், இது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இருப்பினும், இது மேகவெடிப்பு அல்ல என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

”பொதுவாக இந்தியாவில் மேகவெடிப்பு என்பது 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான ஒரு சிறிய நிலப்பரப்பில், ஒரு மணி நேரத்திற்குள் 10 சென்டிமீட்டர் (100 மி.மீ) அல்லது அதற்கு மேல் மழை பொழிவதைக் குறிப்பதாகும். ஆனால் சென்னையில் பதிவானது அப்படிப்பட்ட தனிப்பட்ட மேகவெடிப்பு நிகழ்வு அல்ல.

வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளின் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்தச் சுழற்சியானது சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.5 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரம் வரை பரவியிருந்தது.

இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடகடலோர தமிழகப் பகுதிகளில் காற்றுகள் ஒன்றிணைவதும், ஈரப்பதம் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதும் ஊக்குவிக்கப்பட்டது.

வளிமண்டலத்தில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக ஆழ்ந்த வெப்பச்சலன மேகங்களும் திறள் மேகங்களும் உருவாகி தீவிரமடைந்தன. கருமேகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் சூழ்ந்து பரவலாகச் செயல்பட்டதன் விளைவாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த அதி கனமழை பதிவாகியுள்ளது.

பொதுவாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் பட்சத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம் என்றாலும், இத்தகைய தீவிர மழைக்கான கணிப்புகள் முன்கூட்டியே வானியல் மாதிரிகளில் தென்படாததால் சிறப்பு எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களிலும் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் மழை தொடர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை நிலவரம்

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்றைய நிலவரப்படி (18.10.2026) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் சில குறிப்பிட்ட கடல் பகுதிகளில் (விசாகப்பட்டினம் சென்னையில் கொட்டித்தீர்த்த அதி கனமழை: இது மேகவெடிப்பா?மற்றும் கிழக்கு கோதாவரி) மட்டும் கடல் நீரோட்டம் தொடர்பான சிறிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் வழக்கம்போல தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link