ரியாத்: சவுதி அரேபியாவில் விமான நிலையங்களை குறிவைத்து, ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
சவுதியால் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அக்., 24 வரை விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது, மற்றொரு விமான நிறுவனமான ஆகாசா ஏர், அக்., 27 வரை ரியாத், ஜெட்டா நகரங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
அறிக்கை; சவுதியின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான விமான டிக்கெட் கட்டணம், எந்தவித பிடித்தமின்றி 7 நாளுக்குள் திருப்பி தரப்படும். மாற்று தேதியில் பயணிக்க விரும்புவோருக்கு, எந்தவித கூடுதல் கட்டணமின்றி பயண தேதி மாற்றி தரப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
