விலைவாசி உயர்வு, பொருளாதாரம் சீர்குலைவால் பிரான்சில் திடீரென நேற்று போராட்டம் வெடித்தது. வன்முறையில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தலைநகர் பாரிசில் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டதாக 1800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லிமோஜில் நகரில் 143 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரசபை கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டது. அங்குள்ள சுற்றுலா அலுவலகம் அழிக்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் லுனஸ் கண்டித்துள்ளார்.
வன்முறை சம்பவங்கள் குறித்து பேசிய அதிபர் மேக்ரான், அமைதியான போராட்டத்தில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரான்சில் திடீரென இந்த போராட்டம் வெடிக்கவில்லை. கடந்த மாதத்தில் இருந்தே நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாணவர்கள் அமைப்பினர் பேரணிகளை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்கள், ஒரே நாளில் அந்நாட்டை தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறது. நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்காமல் அலட்சியம் செய்ததே முக்கிய காரணம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
