“சென்னையில் பெரும்பாலும் தண்ணீர் வற்றிவிட்டது” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

பள்ளிக்கல்வித் துறை அமைச்ச ராஜ்மோகன் இன்று (18-10-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நேற்று பெய்த மழையில் எழும்பூரில் உள்ள புதுப்பேட்டையில் இடுப்பளவு தண்ணீர் நின்றது. அதை மிக வேகமாக துரிதமாக செயல்பட்டு காலையில் 6 மணிக்குள் அந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டோம். சில இடங்களில் சேறுகளும் குப்பைகளும் தேங்கி இருக்கிறது, அதையும் மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான சுரங்கபாதைகளில் காலை 6 மணி நிலவரப்படி அங்கு இருக்கக்கூடிய தண்ணீரை வேகமாக வெளியேற்றிவிட்டோம். குறுகிய நேரத்தில் மிக அதிக கனமழை பெய்திருக்கிறது.

அதனால் நம்முடைய மாநகராட்சி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகளும் சேர்ந்து வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் தண்ணீர் வற்றிவிட்டது. சில இடங்களில் சாலையை விட வீடு கீழ்மட்டத்தில் இருக்கிறது. சாலையில் தண்ணீரை வெளியேற்றிவிட்டாலும் கூட சில வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள், எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்க்ள் உதவி செய்து வருகிறார்கள். இது போன்ற விஷயங்களில் கட்சி பாகுபாட்டை தாண்டி மக்கள் நலன் சார்ந்து வேகமாக ஒன்று சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். முழுமையாக முடிந்திருந்தால் கடந்த காலங்களில் ஏன் மழைநீர் நின்றது என்பது கேள்வியாக இருக்கிறது. முதல்வர் விஜயின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனையின் பேரில் எல்லோருக்கும் தனி தனி பணிகள் கொடுக்கப்பட்டு துரிதமாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. எந்த வகையிலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. எந்த பெரிய அசம்பாவிதமும் இல்லாத வகையில் மிகச் சிறப்பாக நிலைமை இப்பொழுது கட்டுக்குள் இருக்கிறது” எனக் கூறினார்.