பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கில் தனது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வீரமணி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம் சாட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரித்த கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின், போலீஸ் அகாடமி இயக்குநரான முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த வழக்குத் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்து வரும் நிலையில், டிஜிபி மகேஸ் குமார் அகர்வால் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது. வீரமணி மீதான போக்சோ வழக்கில் அரசியல் பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் தகவல் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், இந்த வழக்கில் வீரமணியின் மேலாளர் சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக வீரமணி வீடுகள், அலுவலகங்கள் நடந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க மேலாளர் சக்திவேல் மூலம் வீரமணி பணப் பரிமாற்றம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேலாளர் சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
