தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்தது. பின்பு இன்று மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, “இதயத்தை நொறுக்கும், ஒரு அநீதியான நிகழ்வு. ஒரு முழுப் படக்குழுவின் பேரார்வம் இறுதியில் இப்படிச் சீரழிக்கப்பட்டுவிட்டது. அனைவரையும் நான் மிகுந்த நேர்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுக்குத் துணையாக நிற்கிறேன். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!#JanaNayagan
— Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026
