புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு, சின்ன வீடு கட்டி வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பல ஆண்டு கனவு நிறைவேறுகிறது. புறம்போக்கில் வீடு இருந்தால் EB கனெக்ஷன் கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை இனி இல்லை. தமிழக அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.தமிழ்நாடு மின்வாரிய இயக்குநர் மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசின் திட்டம் என்ன?
புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட, 250 சதுர அடிக்கு மிகாமல் (Not Exceeding 250 )உள்ள வீடுகளுக்கு மட்டும், அரசு அதிகாரிகளிடம் இருந்து No Objection Certificate(NOC) வாங்காமலேயே வீட்டு மின் இணைப்பு வழங்கப்படும். இதற்காகவே புதிய தனி கேட்டகிரி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பிரிவின் பெயர்: Low Tension Tariff IA(3) – Poromboke மின் கட்டணம் சாதாரண வீட்டு கட்டணமான LT IA-Domestic கட்டணமே வசூலிக்கப்படும். இதற்காக LT Billing Software-ல் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்காது?
எல்லா புறம்போக்கும் இல்லை. அரசின்’தமிழ் நிலம்’ (Tamil Nilam) இணையதளத்தில்குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இந்த சலுகை கிடையாது.
1. நீர் நிலை புறம்போக்கு – குளம், குட்டை, ஏரி, ஆறு
2. மேய்க்கால் புறம்போக்கு
3. மந்தைவெளி / மெய்ச்சல் தரை / மயான தரை புறம்போக்கு
4. வனத்துறை நிலங்கள் – Reserve Forest இல்லாத Forest Poromboke கூட
5. கன்டோன்மென்ட் பகுதிகள்
6. ரயில்வே நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள்
7. கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்கள் பெயரில் உள்ள பட்டா மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள்
இவை தவிர உள்ள மற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மின் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும்?
முதல் நடைமுறை: TNEB-யில் உள்ள FORM-I விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
2வது நடைமுறை: நான்-ஜுடிசியல் முத்திரைத்தாளில் 3 உறுதிமொழிகளை எழுதி கொடுக்க வேண்டும்:
– அரசு நிலம் தேவை என்று கேட்டால் எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடுவேன், மின் இணைப்பை துண்டிக்க சம்மதம்.
– இந்த மின் இணைப்பு கொடுப்பதால் எனக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும், பட்டாவும் வந்துவிடாது என்பதை அறிவேன்.
– எனது வீடு மேலே தடை செய்யப்பட்ட 7 வகை புறம்போக்கில் இல்லை என்று உறுதி அளிக்கிறேன்.
3வது நடைமுறை: Tamil Nadu Electricity Distribution Code-ன் Appendix III-ல் உள்ள *FORM-6 Indemnity Bond கொடுக்க வேண்டும்.
4வது நடைமுறை : சாதாரண வீட்டுக்கு கட்டும் Security Deposit-ஐ விட இரண்டு மடங்கு (Twice the normal rate) டெபாசிட் கட்ட வேண்டும். மற்ற அனைத்து கட்டணங்களும் வழக்கம் போல் வசூலிக்கப்படும்.
அதிகாரிகள் என்ன செய்வார்கள்?
விண்ணப்பம் வந்ததும் Section Officer, சம்பந்தப்பட்ட VAO / வருவாய் அதிகாரியிடம் இருந்து ‘தமிழ் நிலம்’ போர்ட்டல் மூலம் அந்த நிலம் தடை செய்யப்பட்ட வகையா இல்லையா என்பதை உறுதி செய்வார்.
இதற்காக TNPDCL போர்ட்டலும், தமிழ் நிலம் போர்ட்டலும் API மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அது முடியும் வரை மேனுவலாக சரிபார்த்து கனெக்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த திட்டத்தில் எத்தனை விண்ணப்பம் வந்தது
எத்தனைக்கு கனெக்ஷன் கொடுக்கப்பட்டது
எத்தனை நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களும் 3 மாதத்திற்கு ஒருமுறை (Quarterly), ஒவ்வொரு காலாண்டின் 5-ம் தேதிக்குள் Chief Engineer / Commercial அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஏழைகளின் வீடுகளுக்கு வெளிச்சம் தரும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
