அதி கனமழை! சென்னை, சேலம் உள்பட பல மாவட்டங்களில்… அமைச்சர்களை முடுக்கி விட்டது தமிழக அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கிய மூன்றாவது நாளே, சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பருவமழை கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் சென்னைக்கு திரும்ப, அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், ‘எல் நினோ’ என்ற காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் செய்யவில்லை. இதனால், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுள்ளன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை, கடந்த, 15ம் தேதி தமிழகத்தில் துவங்கியது. எல்நினோ பாதிப்பு காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், பருவமழை துவங்கிய மூன்றாவது நாளில், சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையின் பிரதான சாலைகளில் வெள்ள நீரில் வாகனங்கள் தத்தளித்தன. சில இடங்களில், இரு சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது.

சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை வாயிலாக, சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர், ராட்சத மோட்டார்கள் மற்றும் விவசாய டிராக்டரில் பொருத்திய மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டன. சென்னையில் இன்றும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு நேற்று பிற்பகலில் முதல்வர் விஜய் சென்றார். அங்குள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். வெள்ள பாதிப்பு தடுப்பு பணி குறித்த விபரங்களை, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணியில், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு அமைச்சர் ரமேஷ், தண்டையார்பேட்டை, மாதவரத்திற்கு லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம், திரு.வி.க., நகருக்கு அருண்ராஜ், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டைக்கு விஜய் பாலாஜி, கோடம்பாக்கம், வளசரவாக்கத்திற்கு பிரபு, ஆலந்துார், அடையாறுக்கு பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லுாருக்கு விக்னேஷ் நியமிக்கப்பட்டனர். அனைத்து மண்டலங்களுக்கும் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டார்.

இது மட்டுமின்றி, அனைத்து மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள், தொடர் விடுமுறையை கழிப்பதற்கு, நேற்று முன்தினம் காலையே சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். வழக்கமாக இதுபோன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யும் போது, பருவமழை காலங்களில், சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என, அரசு உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்படும்.

ஆனால், இம்முறை அதுபோன்ற எந்த அறிவுறுத்தலும் இல்லை. த.வெ.க., அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு விபரமும் தெரியவில்லை. அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படாததால், அதிகாரிகளும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

மண்டல பொறுப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களுக்கு செல்லவில்லை. இது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியூர் சென்றுள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், விரைந்து சென்னைக்கு திரும்ப அரசால் உத்தரவிடப்பட்டது. அதனால், அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர அவசரமாக நேற்று சென்னை திரும்பினர்.

இன்று ‘ஆரஞ்ச் அலர்ட்’

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் அதி கனமழை பெய்தது. இதில், அதிகபட்சமாக, பாரிமுனை பகுதியில், 36 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கத்திவாக்கம், 34; சென்ட்ரல், 27; திருவொற்றியூர், எண்ணுார் பகுதிகளில் தலா, 22; எம்.ஜி.ஆர்., நகர், 19; தண்டையார்பேட்டை, பெரம்பூரில் தலா, 18; வடபழனி, சென்னை கலெக்டர் அலுவலகம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் தலா, 16; பேசின் பாலம், நந்தனம், சென்னை விமான நிலையம், ஆலந்துார் தலா, 15; ஐஸ்ஹவுஸ், அண்ணா பல்கலை, 14; மீனம்பாக்கம், மாதவரம் பகுதிகளில் தலா, 13 செ.மீ., மழை பெய்துள்ளது.

லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, கர்நாடகா, தெற்கு ஆந்திரா வரை வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக, சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும். இதற்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, விருதுநகர், சேலம், தர்மபுரி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், கனமழையும் இடையிடையே மிக கனமழையும் பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் திடீர் கனமழை ஏன்?

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் தீவிரமான மழை பொழிவு இருந்தது. பரவலாக கனமழை பெய்த நிலையில், சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பதிவானது.

தமிழகத்தின் வடமாவட்டங்கள், அவற்றை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில், கடல் மட்டத்தில் இருந்து, 5.8 கி.மீ., உயரம் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த மழை பெய்தது.

காற்று ஒருங்கிணைதல், ஈரப்பதத்தின் வரத்து காரணமாக ஏற்பட்ட சாதகமான சூழல் பின்னணியில், ‘குமுலோநிம்பஸ்’ என்ற மேகக் கூட்ட திரட்சி உருவானது. இந்த வெப்பச் சலன மேக கூட்டங்கள் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் கனமழை கொட்டியது.

பொதுவாக, 20 முதல் 30 சதுர கி.மீ., பரப்பளவில், ஒரு மணி நேரத்தில், 10 செ.மீ., அல்லது அதற்கு மேல் மழை பெய்தால் மட்டுமே, மேக வெடிப்பாக கருதப்படும். எனவே, நேற்று முன்தினம் பெய்த மழை, வெப்பச்சலன மேக கூட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடைய நிகழ்வாக கருதப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘ரெட் அலர்ட்’ குறித்து எச்சரிக்கை

பீதியை கிளப்பிய பேரிடர் ஆணையம்

சென்னையில் நேற்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, ‘ரெட் அலர்ட்’ விடுத்தது குறித்து, பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பிய திடீர் எச்சரிக்கை செய்தியால், மக்களிடம் பீதி ஏற்பட்டது.

தமிழகத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது, அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடக்கைகளை, பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்து வருகிறது. இதில் பேரிடர் ஏற்பட்ட பின் மீட்பு பணிகளை மேற்கொள்வதை விட, முன்னெச்சரிக்கை பணிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதற்காக, ‘டிஎன் அலர்ட்’ என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டது. மிக கனமழை, அதி கனமழை, புயல் போன்ற சமயங்களில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி, உஷார் படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கையை, வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது. இத்தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க, பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்து, சென்னை மாவட்டத்தை சேர்ந்தோரின் மொபைல் போன்களுக்கு, எஸ்.ஓ.எஸ்., எனப்படும் அவசரகால தகவல் அனுப்பியது.

வழக்கமான குறுஞ்செய்தியாக இல்லாமல், எஸ்.ஓ.எஸ்., தகவலாக வினோத ஒலியுடன் இத்தகவல் மொபைல் போன்களுக்கு வந்தது. திடீரென ஒலியுடன் வந்த இத்தகவல், மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. மொபைல் போன் திரையில் வந்த எச்சரிக்கை தகவல் தொடர்ந்து நீடித்ததால், மக்கள் மத்தியில் குழப்பமும் பீதியும் ஏற்பட்டது.

Source link