வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது; மருத்துவத் துறைக்கு 3 முக்கிய இலக்குகளை முதல்வர் கொடுத்துள்ளார். நோய் பரவல், உயிரிழப்புகளை தடுத்தல், தடையற்ற மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில், ஆய்வுகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளோம்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட, நகர மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகள், இதய சிகிச்சை பிரிவுகள், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

குறிப்பாக, மின்தடை ஏற்படக் கூடாது என்று மின்வாரியத்திடம் பேசி வருகிறோம். ஒருவேளை மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டர்கள் மூலம் தடையற்ற மின்சார வழங்க உத்தரவிட்டுள்ளோம். ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைப்பதற்கான வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் சேவைகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னையில் மட்டும் 70க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனையில் போதிய மருந்துகள் கையிருப்பில் இருக்க வேண்டும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், டெங்கு, பாம்புக்கடி போன்ற சிகிச்சைக்கான மருந்துகள் கையிருப்பில் வைக்க உத்தரவிட்டுள்ளோம். மருத்துவமனைகளில் மழைநீர் புகுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த பருவமழை காலத்தில் மருத்துவமனைகளுக்குள் மழைநீர் புகாதபடி, வடிகால்கள் தூர்வார வேண்டும். தேவையான பம்புகளை இருப்பு வைக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் சமைக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் சமைக்க வேண்டும். தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் தாழ்வாக உள்ள அரசு மருத்துவமனை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

தமிழகம் முழுதும் 1,000 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்களில் நிலவேம்பு கசாயம் போன்றவை வழங்கப்படுகிறது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின் பேரில் களத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link