சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இன்று (18-10-26) சென்னையில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனால், சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரை பகுதியில் காற்று சுழற்சி ஏற்படும் என்றும் அதனால் சென்னைக்கு அதிகமாக கனமழை பெய்யும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், அந்த காற்று வலுவிழுந்ததால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டு ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.