தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் நிர்வாகத்தில் ஊழல் நிறைந்துள்ளது என குற்றம்சாட்டி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரை அந்த பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்படுவதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்துள்ளார்.
பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ஹசீனா சையத் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் நேசித்த நமது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கான எனது ராஜினாமா கடிதத்தை, மிகுந்த மனவேதனையுடன் தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எனது அந்தக் காதல் ஒருதலைப்பட்சமானதாகவே அமைந்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் எனக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய தேர்தல் குழுவும் (CEC), தாங்களும் வலியுறுத்தி முடிவெடுத்திருந்தபோதிலும், எனக்குப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், அந்தச் செயல்முறையின்போது நான் அவமதிக்கப்பட்டேன். இது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி அம்மையார், ராஜீவ் காந்தி ஐயா, சோனியா காந்தி அம்மையார் மற்றும் தாங்கள் ஆகியோர் கொண்டிருந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு குறித்த கனவு, வெறும் வாய்மொழிப் பேச்சாகவே சுருங்கிவிட்டது. ஏனெனில், என்னைப் போன்ற தகுதிவாய்ந்த ஒரு பெண்ணுக்கும், தமிழக மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது; எங்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்த எனக்கு, கட்சியின் தலைமை அநீதி இழைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நான் தீவிரமாக முறையிட்டேன். ஆனால், வழக்கம் போலவே எனது முயற்சிகள் அனைத்தும் வீணாயின. அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஊழல் நிறைந்த நிர்வாக முறையையும், அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தற்போதைய ஜார்கண்ட் மாநிலப் பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழகப் பொறுப்பாளர்), மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளிநாடு வாழ் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய புஷ்பராஜ், மற்றும் தற்போதைய தமிழகப் பொறுப்பாளர்களான கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரின் தீய உள்நோக்கங்களையும் ஆதரித்துள்ளார்.
மாணவர் காங்கிரஸ் (Students Congress) அமைப்பிலிருந்து தொடங்கி, கடந்த மூன்று தசாப்தங்களாக நமது கட்சியில் நான் அர்ப்பணிப்புடன் ஆற்றிய கடும் உழைப்பையும், 2008-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் Talent Hunt (திறமை கண்டறியும்) திட்டத்தின் மூலம் தாங்களே என்னைக் கண்டறிந்து வளர்த்தெடுத்ததையும் மீறி, இன்று எனது கண்ணியமும் சுயமரியாதையும் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். எனக்கு நியாயம் மறுக்கப்படும் ஒரு சூழலில், இந்தப் பதவியில் நான் தொடர்ந்து நீடிப்பது இனி சாத்தியமில்லை; எனக்கே நியாயம் கிடைக்காதபோது எனது கீழ் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு 33% மகளிர் இடஒதுக்கீடு உரிமைகளை என்னால் எவ்வாறு பெற்றுத் தர இயலும்? எனவே, தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் நான் விலகுகிறேன். இருப்பினும், நமது கட்சியின் மீதும், காந்தி குடும்பத்தின் மீதும் நான் கொண்டுள்ள அன்பு என்றென்றும் தொடரும். எனது ஒரே கேள்வி இதுதான் நமது மதிப்பிற்குரிய காங்கிரஸ் தலைவர் போன்ற ஒரு மூத்த தலைவர், நமது மாநில காங்கிரஸ் கமிட்டி (PCC) தலைவரின் ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பை ஆதரிக்கும் வகையில், எவ்வாறு இவ்வளவு பாரபட்சமாக நடந்துகொள்ள முடியும்? இதன் விளைவாக, கட்சியின் உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிலவும் இந்தச் சீர்கேடு சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமடைந்துவிட்டது. இது கட்சிக்குப் பேரிழப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, கட்சிக்குள் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு நடக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
