கோவையில் கனமழை; குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளநீர்; மாநகராட்சி அதிகாரியிடம் அமைச்சர் சம்பத்குமார் வாக்குவாதம்

கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, சிவானந்த காலனி, சங்கனூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவு நீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியும், சில இடங்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியும் வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

குறிப்பாக, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரைக் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சாலையின் பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாநகரில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தாலும், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் அன்றாடப் பணிகளுக்குச் செல்வோர் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மாநகராட்சி அதிகாரியிடம் மழைநீர் தேங்கியுள்ளதற்கான காரணம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அப்போது அதிகாரியிடம் கடுமையாகப் பேசிய அமைச்சர், “நீங்கள் சரியாகச் செயல்படவில்லை. இங்கு பார்த்தால் எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. ஒருநாள் கூட வேலை நடப்பதில்லை. எந்தெந்த இடங்களில் வேலை செய்தீர்கள்? அதை வந்து காட்டுங்கள். நாளை மக்களுடன் வந்து, நீங்கள் வேலை செய்த இடங்களைக் காட்டுங்கள்” என்று கூறினார். மேலும், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாரி பராமரித்திருந்தால், இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது எனக் கூறிய அமைச்சர், “சரியாகத் தூர்வாரி இருந்தால் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று அதிகாரியிடம் அதிருப்தி தெரிவித்தார்.

கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் மழைநீர் வடிகால் பராமரிப்புப் பணிகள் குறித்து அமைச்சர் நேரடியாகக் கேள்வி எழுப்பியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வடிகால்களைச் சீரமைத்து மீண்டும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source link