டேட்டா சென்டருக்கு ஏர் கூலிங்.. தண்ணீர் பயன்பாட்டை குறைக்க புதிய ஐடியா! அசத்தும் அதானி நிறுவனம்

மும்பை: கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமத்தின் அதானி கனெக்ஸ் விசாகப்பட்டினத்தில் அமைக்க இருக்கும் டேட்டா செண்டரில் நன்னீர் பயன்பாட்டை குறைக்க முற்றிலும் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், அதற்கான டேட்டா செண்டர்கள் பல்வேறு நாடுகளிலும் நிறுவப்படுகின்றன. இந்த டேட்டா செண்டர்களில் இயங்கும் சர்வர்களை குளிர்விக்க அதிகப்படியான தண்ணீர் செலவிடப்படுகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் தண்ணீர் தேவை அதிகரித்து வரக்கூடிய நிலையில், டேட்டா செண்டர்களுக்கான நீர் தேவையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான், விசாகப்பட்டினத்தில் அமைய உள்ள டேட்டா சென்டர்களில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ஏர் கூலிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த 3 மையங்களிலும் பயன்படுத்தப்படும் நல்ல தண்ணீரின் அளவு, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தில் கொள்ளளவைவிடக் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள முடசர்லோவா மற்றும் தர்லுவாடா பகுதிகளில் அதானி கனெக்ட்ஸ் டேட்டா சென்டர்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. சுமார் 1 ஜிகாவாட் திறனைக் கொண்ட இந்தத் திட்டம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் விசாகப்பட்டினத்தை முக்கிய மையமாக உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

டேட்டா சென்டர்களில் கணினிகள் மற்றும் சர்வர்களில் உருவாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த நீரை ஆவியாக்கி கூலிங் முறை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விசாகப்பட்டினத்தில் அமைய இருக்கும் திட்டத்தில் காற்றின் மூலம் கூலிங் செய்யப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், இத்தகைய நீர் சார்ந்த கூலிங் அமைப்பு தேவை தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மையங்களிலும் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான நல்ல தண்ணீர் சுமார் 80 சதவீதம், பூங்காக்களைப் பராமரித்தல், சமையலறைகள் மற்றும் பணியாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தைச் சார்ந்திருக்காமல், தனியான தொழிற்சாலை நீர் இணைப்புகள் மூலம் தண்ணீர் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும், டேட்டா சென்டர்களின் நீர்த் தேவைக்கும் இடையே போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. தரவு மையங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வளாகத்திலேயே சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். பூங்காக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், கழிப்பறைகளில் பயன்படுத்துதல் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த நீர் பயன்படுத்தப்படும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் முடசர்லோவா நீர்த்தேக்கத்தில் வெளியேற்றப்படாது என்றும் நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் ஏ.ஐ. டேட்டா சென்டர் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அதன் நீர் மற்றும் மின்சாரத் தேவைகள் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, நகருக்குக் குடிநீர் வழங்கும் முடசர்லோவா நீர்த்தேக்கம் மற்றும் அதையொட்டிய கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம் அருகே இந்தத் திட்டம் அமைவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்த சூழலில்தான், பெரிய அளவில் நீர் தேவைப்படாத ஏர்கூலிங் முறையை கடைப்பிடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க பெரிய அளவிலான டேட்டா சென்டர் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் டேட்டா சென்டர் திட்டங்கள் 6.5 ஜிகாவாட் திறனுக்கு விரிவுபடுத்தப்பட்டால், ஆண்டுக்கு சுமார் 3 டிஎம்சி தண்ணீர் தேவைப்படலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், அதானி கானெக்ஸ் மற்றும் கூகுள் இணைந்து அமைக்கும் டேட்டா சென்டர்களில் ஏர் கூலிங் தொழில்நுட்பம், நீர் மறுசுழற்சி மற்றும் தனியான தொழிற்சாலை நீர் இணைப்புகள் மூலம் நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.