பண்டிகை காலங்களில் தொடர்ந்து 3, 4 நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைக்கும் போது வெளியூர்களில் வேலை செய்யும் அரசு அலுவலர்களும், தனியார் நிறுவன பணியாளர்கள், மாணவர்கள் சந்தோசப்படுகின்றனர். சொந்த ஊர்களுக்கு போகலாம் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகளை பார்க்கலாம், சில நாட்கள் அவர்களுடன் தங்கலாம் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு பல நாட்களுக்கு முன்பே தொற்றிக் கொள்ளும். பஸ் கிடைக்கவில்லை என்றாலும் நின்று கொண்டாவது ஊருக்கு போகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக அமைச்சர்களே நடந்து கொள்வதால் நொந்து போய் உள்ளனர் அரசு அலுவலர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் அரசுப் பணியில் உள்ள அலுவலர்களில் சுமார் 60 சதவீதம் பேர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே உள்ளனர். தற்போது ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் மாவட்ட அதிகாரிகள் பலரும் சொந்த ஊர்களுக்கும் கிளம்பும் நேரத்தில் தொடர்ச்சியாக சனி, ஞாயிறு என்று 2 நாட்களாக அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் பல இடங்களிலும் நடந்தது. இதில் மாவட்ட, தாலுகா அளவில் உள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றதால் விடுமுறை நாளில் கூட யாரும் ஊருக்கு போகாமல் அமைச்சர் நிகழ்ச்சிகளில் நொந்துகொண்டே பங்கேற்றனர்.
இத்தோடு முடியாமல் நாளை ஆயுதபூஜை நாளில் கூட அமைச்சரின் அரசு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதால் எந்த அதிகாரியும் சொந்த ஊருக்கு போக முடியவில்லை. பண்டிகை கால விடுமுறையை கூட குடும்பத்தோடு கொண்டாட முடியவில்லை. அமைச்சருக்கு இது பண்டிகை கால விடுமுறை நாட்கள், இந்த நாட்களில் அரசு நிகழ்ச்சியை தவிர்த்து அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்க வேண்டும் என்பது தெரியுமா தெரியாதா என்று வெளிமாவட்டங்களைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் புலம்புகின்றனர். மேலும், எங்கள் பண்டிகை கால விடுமுறையையும், மகிழ்ச்சியையும் அமைச்சர் வீணாக்கிவிட்டார் என்கின்றனர்.
