நான் சென்ற வாரம் ஒரு பொதுத்துறை வங்கியில் 90 கிராம் நகைகளை அடகு வைத்து 7,90,000 ரூபாய் பெற்றேன். அதற்கு சேவை கட்டணமாக 2,804 ரூபாயும், அப்ரைசர் கட்டணமாக 600 ரூபாயும் பிடித்து கொண்டனர். கூட்டுறவு வங்கிகளில் கடனையே தள்ளுபடி செய்யும்போது, சேவை கட்டணமாக 2,804 ரூபாயை பொதுத்துறை வங்கி வாங்குவது சரியா? இந்த கட்டணம் என்னிடம் அதிகமாக வசூலிக்கப்பட்டதா?
ஆர்.சேகர் ரத்தினம், சேலம்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லப்படுவது த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதி தான். இன்னும் நடைமுறைக்கு வந்தது போல் தெரியவில்லை. நீங்கள் கூட்டுறவு வங்கியில் தங்கநகை கடன் வாங்கவில்லை. பொதுத் துறை வங்கியில் தான் வாங்கியுள்ளீர்கள். அங்கே என்ன உரிய கட்டணங்களோ, அவற்றை கட்டித்தானே ஆகவேண்டும். பொதுத் துறை வங்கிகளில், சேவைக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று எந்த சுற்றறிக்கையும் வந்தது போல் தெரியவில்லையே?
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற போகிறேன். இப்போதே பி.எப்., பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதோ, வங்கியில் முதலீடு செய்வதோ லாபகரமாக இருக்குமா?
ஏ.நாகலிங்கம், வாட்ஸாப்
வட்டிக்கு பணம் கொடுப்பதும், கொடுத்த பணத்தை திரும்ப வசூலிப்பதும் எவ்வளவு சிக்கலான விஷயங்கள் என்பது எனக்கு தெரியாது. எனவே, அதை பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், பி.எப்., பணத்தை எடுத்து வங்கியிலோ, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திலோ முதலீடு செய்வதை பொறுத்தவரை ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். தற்போது பி.எப்., தரும் வட்டி 8.25%. சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் 8.20 சதவீதம் வட்டி தருகிறது. அதுவும் வரிக்கு முந்தைய வட்டி விகிதம் தான். அந்த வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கலாம்.
பி.எப்., பணத்தை எடுக்கும்போது வரி செலுத்த வேண்டுமா என்பதும், உங்கள் சேவைக்காலம் உள்ளிட்ட சில நிபந்தனைகளை பொறுத்தது. எனவே, பி.எப்., பணத்தை எடுப்பதற்கு முன்பு வரி விதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக இப்படி பாருங்கள். பி.எப்., தரும் வருவாயை விட அதிகமான நிகர வருவாயை, அதாவது வரி மற்றும் பிற செலவுகளை கழித்த பிறகும் அதிக வருவாயை தரக்கூடிய முதலீடு ஏதேனும் இருந்தால், அதில் பணத்தை முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம். பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டுகள் போன்றவற்றில் உங்களுக்கு போதுமான அனுபவம் இருந்தால், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். ஆனால், அவற்றில் கிடைக்கும் வருவாய் உத்தரவாதமானது அல்ல.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற போகிறீர்கள் என்பதால், இப்போது உங்கள் முன்னுரிமை, ஓய்வுக்காலத்துக்கான பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிக வருவாய் கிடைக்கும் என்ற ஆசையில், உத்தரவாதமான வருவாயை தரும் பி.எப்., பணத்தை அவசரப்பட்டு வெளியே எடுக்க வேண்டாம். உங்கள் தேவைகள், ஓய்வுக்கால செலவுகள், பிற வருமானங்கள் ஆகியவற்றை கணக்கிட்ட பிறகு முடிவெடுங்கள்.
குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லையென்றால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பி.எப்., பணத்தை அங்கேயே வைத்திருப்பது விவேகமான முடிவு.
ரிசர்வ் வங்கி கால் சதவீதம் வட்டி உயர்த்தியுள்ளதால், நான் வீட்டுக் கடன் வாங்கிய பொதுத் துறை வங்கி, தனது வட்டியை 7.85 சதவீதமாக உயர்த்தி விட்டது. அதோடு, நான்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. கடன் காலத்தை நீட்டித்து கொள்ளலாம், பகுதியளவு கடனை அடைக்கலாம், இ.எம்.ஐ.,யை உயர்த்தி கொள்வது, இ.எம்.ஐ., மற்றும் கடன் காலம் இரண்டையும் உயர்த்தி கொள்வது. நான் எந்த ஆப்ஷனை தேர்வு செய்வது?
எம்.அருள்ஜோதி, மின்னஞ்சல்
இந்த ஆப்ஷன்களில் எதை தேர்வு செய்வது என்பது உங்கள் மாத வருமானம், குடும்ப செலவுகள், சேமிப்பு ஆகியவற்றை பொறுத்தது. மாத வருமானத்தில் கணிசமான தொகை மிச்சமாகிறது என்றால், கடன் காலத்தை மாற்றாமல் இ.எம்.ஐ.,யை உயர்த்தி கொள்ளுங்கள்.
கையில் கணிசமான தொகை இருக்கிறது; அதேநேரம், அவசர தேவைகளுக்கான சேமிப்பும் போதுமான அளவில் இருக்கிறது என்றால், கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தலாம்.
மாத வருமானத்தில் ஏதும் பணம் மிச்சமாவதில்லை என்றால், இ.எம்.ஐ.,யை உயர்த்தாமல் கடன் காலத்தை நீட்டித்து கொள்ளுங்கள். இ.எம்.ஐ. மற்றும் கடன் காலம் இரண்டையும் உயர்த்துவது என்பது கடைசி தேர்வு. அது வேண்டாம்.
மாத வருமானத்தில் போதிய கொஞ்சம் உபரி இருந்தால் இ.எம்.ஐ.,யை உயர்த்தி கொள்ளுங்கள். காலத்தை நீட்டித்தால், தேவையில்லாமல் கூடுதல் தொகை தான் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலைமையை பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்.
35 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் நடப்பு கணக்கு துவங்கி, வியாபாரம் நடத்தி வந்தேன். வயது முதிர்வு காரணமாக, வியாபார நிறுவனத்தை நிறுத்திவிட்டேன். என் நடப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகையை, கணக்கை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதா? 80 சி விலக்கு பெறுவதற்காக வாங்கப்பட்ட பத்திரத்தை முதிர்வு காலத்துக்கு முன் ரத்து செய்து பணத்தை திரும்பப் பெற வழி உள்ளதா?
ஏ.ராஜேந்திரன், உடுமலைபேட்டை
நடப்பு கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை உங்களால் முழுமையாகத் திரும்ப பெற முடியும். எத்தனை ஆண்டுகளாக அந்த கணக்கை பராமரிக்கவில்லை என்பதை தாங்கள் குறிப்பிடவில்லை. ஒருவேளை இந்த கணக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கவில்லை என்றால், அந்த தொகை முதலீட்டாளர் கல்வி, விழிப்புணர்வு நிதியத்துக்கு மாற்றப்பட்டு இருக்கலாம்.
எந்த வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருந்தீர்களோ, அந்த கிளையில் போய் கேளுங்கள். ஒருவேளை பணம் நிதியத்துக்கு அனுப்பப்படவில்லை என்றால், ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படங்கள், பழைய நடப்பு கணக்கு புத்தகம், செக் புக் அல்லது நிறுவனம் சார்ந்த பழைய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதை சமர்ப்பித்து, இருப்பு தொகையை பெறலாம்.
வருமான வரி விலக்கு அளிக்கும் பெரும்பாலான 80சி பத்திரங்கள் 5 ஆண்டுகள் வரை கடுமையான லாக்-இன் காலத்தை கொண்டிருக்கும். இந்த லாக்-இன் காலம் முடியும் வரை பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. முதிர்வு காலம் வரை காத்திருக்க தான் வேண்டும்.
