உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்ரிக்க சட்ட நிபுணரான, 85 வயது பெண்மணியான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்கு, 208 தனி நபர்களின் பெயர்களும், 79 அமைப்புகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமைதி மற்றும் நீதிக்காக, நீண்ட நாட்களாக போராடி வரும் நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதால், தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டது, அவருக்கு மிகுந்த அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், ‘யாருக்கும் தெரியாத நபர் நவநீதம் பிள்ளை’ என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் பிறந்த நவநீதம் பிள்ளையின் தாத்தா, பாட்டி, 1890-ம் ஆண்டுகளில் நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தென் ஆப்ரிக்காவின் நடால் மாகாணத்தில் உள்ள கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இப்படி புலம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு – சாந்தம்மா தம்பதியின் ஐந்தாவது மகளாக பிறந்தவர் தான் நவநீதம் பிள்ளை. இவரின் தந்தை பஸ் டிரைவராக இருந்தவர்.
தென் ஆப்ரிக்கா நாட்டில், இனவெறியானது அரசின் கொள்கையாக இருந்த காலகட்டத்தில் வளர்ந்த நவநீதம் பிள்ளை, இனப் பிரிவினையை யும், இனவெறி சார்ந்த பாரபட்சங்களையும் அனுபவித்தார்.
அதனால், இனவெறி ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்; கல்லுாரி படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றிய போதும், அந்த அநீதிகளுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டார்; சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
கடந்த 2008 – 2014 வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையராகவும், சர்வதேச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாகவும் பணியாற்றினார். 2021 – 2025 வரை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதி குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டார்.
அதனால், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான நவநீதம் பிள்ளையின் முயற்சிகளுக்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. அவரது உறுதியான அறநெறி மற்றும் சர்வதேச சட்டங்களை மேம்படுத்துவதற்கு, அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு களையும் நோபல் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நவநீதம் பிள்ளையையும் சேர்த்து, இதுவரை 21 பெண்கள் அந்த பரிசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக பணியாற்றும் நவநீதம் பிள்ளை, மோதல்கள் நிறைந்த உலகில், சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவத்தை தக்கவைக்க ஆற்றி வரும் பணிகள், அமைதியான உலகத்தை உருவாக்க விரும்பும் அனைவருக்கும், ஒரு நம்பிக்கையாகவும், ஊக்கமாகவும் பார்க்கப்படுகின்றன.
இவரது தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தான், ‘காசாவில் பாலஸ்தீனியர் களுக்கு எதிராக இஸ்ரேல் இன படுகொலை செய்துள்ளது’ என்று துணிச்சலுடன் தெரிவித்தது. இது, தற்காலத்தின் மிக முக்கியமான மனித உரிமை பிரச்னையை உலகிற்கு நினைவூட்டுவதாக உள்ளது. தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவநீதம் பிள்ளையும் இதை குறிப்பிட்டார்.
சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவை, நீதிக்கு உட்படுத்தப்பட வேண்டும்; சர்வதேச சட்டத்திற்கு ஒரு தார்மீக பரிமாணம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே, அதற்காக சிறப்பாக பங்காற்றிய நவநீதம் பிள்ளையை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு நோபல் குழு தேர்வு செய்துள்ளது பாராட்டத்தக்கது.
