மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மகள்கள் உட்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், 62. இவரது மனைவி சரஸ்வதி, 60. மகள்கள் மகாலட்சுமி, 32, கலைவாணி, 28, அக்ஷயா, 19. முதல், 2 மகள்களுக்கு திருமணமான நிலையில், 3வது மகள் திருப்பூரில் பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய மகேந்திரன் மனைவியை பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலையில் மகேந்திரனை அவரது சகோதரி குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர்.
மூத்த மகள் மகாலட்சுமியை அவரது கணவர் பிரபாகரன் கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரில் கடந்த 15ம் தேதி மதியம் பிரபாகரன் பொறையார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு இலுப்பூர் வீட்டிற்குள் புகுந்த இருவர் மகேந்திரனின் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த மகாலட்சுமி, தன தந்தை மகேந்திரனை, கணவர் பிரபாகரன் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக பொறையார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நிலையில், அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டதால் சந்தேகம் அடைந்த போலீசார், வழக்கு பதிந்து மகேந்திரனின் மனைவி, 3 மகள்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மகேந்திரன் தன் வங்கிக் கணக்கில் உள்ள, 47 லட்சம் ரூபாய், வீடு மற்றும் வீட்டு மனைகளை தன் சகோதரி மகனுக்கு கொடுக்க இருந்தது தெரிந்தது. இதனால் தங்களுக்கு பணம், சொத்து கிடைக்காது என்பதால் ஆத்திரமடைந்த மனைவி மற்றும், 3 மகள்கள் சேர்ந்து மகேந்திரனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, இளைய மகள் அக்ஷயாவின் காதலன் திருப்பூர் ஆண்டிபாளையம் கவுதமகுமார், 22; ரஞ்சித் குமார், 21; ஆகிய இருவருக்கு, 5 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மகேந்திரனை கொலை செய்துள்ளனர். மேலும், விசாரணைக்காக பிரபாகரன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறியாமல், அவர் மீது, கொலை பழி சுமத்தி உள்ளனர் என தெரிந்தது.
இதையடுத்து சரஸ்வதி, மகள்கள் மகாலட்சுமி, கலைவாணி, அக்ஷயா, அவரது காதலன் கவுதமகுமார், அவரது நண்பர் ரஞ்சித் குமார், ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
