VIDEO: 15 வயது சிறுமி மீது தாக்குதல்.. ம.பி. பாஜக மண்டல தலைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

Summary

மத்தியப் பிரதேசத்தில் கர்பா நிகழ்வில் சிறுமியை பிடித்து தள்ளிய பாஜக மண்டல தலைவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கர்பா நிகழ்வில் 15 வயது சிறுமியை பிடித்துத் தள்ளி அவதூறாக பேசிய பாஜக மண்டலத் தலைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கர்பா நிகழ்வு

அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் இந்தூரில் உள்ள ஹிரா நகர் கனகேஸ்வரி கர்பா நிகழ்வுக்கு வந்திருந்தார்.

அனுமதிச் சீட்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அங்கு ஏற்பாடு செய்திருந்த பாஜக மண்டலத் தலைவர் கமல் சௌஹானுக்கும், அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சௌஹான், தடுப்பைத் தாண்டிச் சென்று, அந்தச் சிறுமியை தகாதவாறு பிடித்து பலமுறை பின்னுக்குத் தள்ளினார். மேலும் சிறுமியை அவதூறாக பேசினார்.

வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் ஹிரா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கமல் சௌஹான் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 74 (பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது, விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாஜக – காங்கிரஸ்

இந்தச் சம்பவம் குறித்து பாஜக நகரத் தலைவர் சுமித் மிஸ்ரா, கமல் சௌஹானுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அந்த வீடியோ குறித்து கட்சி உள்விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

மறுபுறம், சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ளும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், பாஸ் தொடர்பான வாக்குவாதம் முற்றியதால் இது நடந்ததாகவும் சௌஹான் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளது. அதே கர்பா பந்தலில் முதலமைச்சர் மோகன் யாதவ் கன்யா பூஜை செய்த சில மணி நேரங்களுக்குள் இந்தச் சம்பவம் நடந்திருப்பது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கமல் சௌஹானை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

Source link