பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதனை தொடர்ந்து நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதன்படி, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயககக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், நிதிஷ் குமார் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 5ஆம் தேதி நிதிஷ் குமார் தாக்கல் செய்து போட்டியிட்டார். அதனை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி அரசியலை நோக்கி பயணிக்க இருக்கிறேன் என நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிதிஷ் குமார் பதவி விலகக் கூடாது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் அதனை மீறி, தான் வகித்து வந்த எம்.எல்.சி பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக இன்று (10-04-26) பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டதன் மூலம் நிதிஷ் குமார் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரின் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அம்மாநிலத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், பா.ஜ.கவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பீகாரின் முதல் முதல்வர் என்று சொல்லப்படுகிறது. அதே போல் துணை முதல்வராக நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தற்போது வரை 11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்து வந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டதன் மூலம் நிதிஷ் குமாரின் முதல்வர் பதவி முடிவுக்கு வருகிறது.
