புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் எழுமாங்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் ஹேமலதா. கோயம்புத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். தற்போது சனி, ஞாயிறு விடுமுறையுடன் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு திங்கள், செவ்வாய் எனத் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் சனிக்கிழமை சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அதன்படி சனிக்கிழமை மாலை 4 மணிக்குப் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பேராவூரணி சென்ற வெற்றிப் பயணப் பேருந்தில் ஏறி புளிச்சங்காடு கைகாட்டிக்கு வந்துள்ளார். மாலை கைகாட்டி வந்து பேருந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய போது பேருந்தின் 2வது படிக்கட்டு உடைந்து ஹேமலதா கால் உள்ளே போனதால் பதறிக்கொண்டு காலை வெளியே எடுத்த போது ரத்தம் கொட்டியுள்ளது. படிக்கட்டு உடைந்து குத்தியதால் ரத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்று கீழே இறங்கி அடுத்த பேருந்து நிறுத்தம் சென்ற போது ரத்தம் அதிகமாக வெளியேறி மயங்கிச் சாய்ந்துள்ளார்.
அங்கு நின்றவர்கள் மாணவி ஹேமலதாவை மீட்டு அவரது பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவரது பெற்றோர் ஹேமலதாவை மீட்டு கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது காலில் ஒரு விரல் பாதி துண்டாகிக் காணாமல் போய் இருந்தது மற்ற இரு விரல்களும் கிழிந்து ரத்தம் அதிகமாக ளெியேறி இருந்ததும் தெரிய வந்தது. கிழிந்த 2 விரல்களும் தையல் போடப்பட்டுத் துண்டான விரலுக்கும் மருந்தை வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். பெண்களுக்கான வெற்றிப் பயண பேருந்து படிக்கட்டுகள் சரியாக இல்லாததால் ஒரு மாணவியின் கால் விரல் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
