-நமது சிறப்பு நிருபர்-
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரான்சில் விலைவாசி உயர்வு, பொது சேவைகளின் தரம் குறைதல், சமத்துவமின்மை ஆகியவற்றை கண்டித்து லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். சில இடங்களில் வன்முறை வெடித்தது.
லிமோஜஸ் என்ற நகரத்தில் 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கிகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், கார்கள் உள்ளிட்டவைக்கும் தீ வைக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். போராட்டங்களில் அத்துமீறிய 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:
நாம் அனைவரும் கோபத்தையும் அவமானத்தையும் உணர்கிறோம்; நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடும் மக்களையும், பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கிச் சூறையாடும் வன்முறையாளர்களையும் நாம் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். கட்டுக்கடங்காத வன்முறைக்கு, எந்தவொரு காரணமும் நியாயமாக இருக்க முடியாது.
வன்முறைகளுக்குப் பின்னால் தீவிர இடதுசாரி குழுக்களும் குற்றவாளிகளும் இருக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டு கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடுகள் வசூலிக்கப்படும்; அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். நாட்டின் இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதை உணர்கிறேன்.
அரசு கல்வி அமைச்சகத்துடன் இணைந்து அவர்களின் தேவைகளைக் கவனிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், மக்களின் பாதிப்புகளைச் சரி செய்ய, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையில் ஒரு அவசர நெருக்கடிக் குழு செயல்படும். இவ்வாறு இமானுவேல் மேக்ரான் கூறினார்.
