எழுதியவர்: வல்லப ஓசர்கர்
மும்பை ஜூஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பின் முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவரது தோள்பட்டை மற்றும் நெஞ்சில் காயங்களுடனும் வலது கையில் கட்டுகளுடனும் அவர் தனது இல்லத்தில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நள்ளிரவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் டைகர் ஷெராஃப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறை முன்னரே தெரிவித்திருந்தது. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணப்படும் காயங்களுக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
ஷெராஃப் குடும்பத்தினரை அவர்களின் இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, “மும்பை கடந்த காலத்தில் நிழல் உலக கும்பல்களின் மோதல் காலத்தை கண்டுள்ளது. காவல்துறை உறுதியான நடவடிக்கையின் மூலம் அந்த சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மீண்டும் அந்த நாட்களை உருவாக்கவோ அல்லது நகரின் அமைதியை சீர்குலைக்கவோ நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.
டைகர் ஷெராஃப் மற்றும் அவரது தந்தையான மூத்த நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரிடம் தாம் பேசியதாக தெரிவித்த ஷிண்டே, அரசும் மும்பை காவல்துறையும் அவர்கள் குடும்பத்திற்கு துணையாக நிற்பதாகவும், அவர்களின் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். இச்சம்பவத்தின் போது 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், நடிகர் நல்வாய்ப்பாக தப்பியதாகவும் அவர் கூறினார்.
இத்தாக்குதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டதற்கு, எந்த கும்பல் ஈடுபட்டிருந்தாலும், மக்களை பயமுறுத்துவதையோ அல்லது வன்முறையை தூண்டுவதோ பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஷிண்டே கூறினார். அச்சுறுத்தல் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“பிரபலங்கள், தொழிலதிபர்கள் அல்லது சாதாரண குடிமக்கள் என யாராக இருந்தாலும், அனைவரின் பாதுகாப்பும் முக்கியமானது. மும்பையில் எந்தவொரு கும்பலும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சட்டத்தை கையில் எடுக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குறித்து இதுவரை அறியப்பட்டவை
டைகர் ஷெராஃப் வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கால்பந்து விளையாடும் புஷ்பா நர்சி பூங்காவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் டைகர் ஷெராஃபின் வழக்கமான நடவடிக்கைகளை முன்பே கண்காணித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். குற்றவாளிகள் நடிகரை பின்தொடர்ந்து வந்து, அவர் வரும் வரை பூங்காவின் வாயிலுக்கு வெளியே காத்திருந்ததாக தெரிகிறது என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
5 முறை துப்பாக்கிச் சூடு
மொத்தம் 5 தடவை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகரின் காரின் அருகே நின்றிருந்த மற்றொரு நபரும் காயமடைந்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்பி ஓடிய குற்றவாளிகள்
தாக்குதல் நடத்தியவர்கள் இரு சக்கர வாகனத்தில் எஸ்.வி சாலை வழியே தப்பிச் சென்று, அந்த பைக்கை அந்தேரி ரயில் நிலையத்திற்கு வெளியே விட்டுச் சென்றுள்ளனர். இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களின் சி.சி.டி.வி காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவர்களைத் தேட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு சமூக வலைதளப் பதிவு இத்தாக்குதலுக்கு தாங்கள் தான் செய்ததாக தெரிவித்துள்ளது. போலீசார் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், டைகர் ஷெராஃபிற்கு இதற்கு முன் மிரட்டல் அழைப்புகள் எதுவும் வந்ததாக காவல் பதிவேடுகளில் புகார்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
